எந்த சூழலில் கேட்டாலும் மனதிற்குள் ஒரு இனிய காதலின் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் இந்த பாடல் என் மனதிற்கு எப்போதுமே நெருக்கமானதாய் இருந்திருக்கிறது.நாயகன் படத்தில் இளையராஜாவின் இசையில் மணிரத்னத்தின் இயக்கத்தில் அற்புதமாய் படமாக்கப்பட்ட பாடல் இது. படம் முழுவதிலும் காதல் காட்சிகளால் நிறைந்து வழியாமல் ஒரு பாடலில் மட்டுமே நிறைவான காதலை காட்டி இருப்பதும் இந்த பாடல் மேல் எனக்கு ஒரு தனி பிரியம் படர காரணமாய்இருக்கலாம்.
வயலினில் ஆரோகணித்துத தொடங்கும் பாடலின் முதல் வரியிலேயே காதலாய் மலரும் ஒரு அற்புதமான சங்கீதம் இருப்பின் அது நீ தான் என சொல்லும் கவிஞரை வியக்கும் போதே, அடுத்த வரியிலேயே அந்த இசைக்கு வார்த்தைகளை போட்டு பாடி விட்டால் அது இன்னும் தெய்வீகமாய் அமைந்து விடும் என்று சாதாரண வரிகளில் கூட அற்புதமான விஷயங்களை சொல்லி விட முடிகிறதே என்று என்னை எண்ண வைத்த பல்லவி இது.சரணத்திலும் கடலலைகளை இசை மகள் மீட்டும் வீணையின் இனிய ஸ்வரங்களாய் உருவகிக்கும் போது தலைவனுக்கு காதல் எவ்வளவு இனிமையான உணர்வை தருகிறது என்று நம்மாலும் உணர முடியும்.
இந்த பாடல் நிகழும் இடம் மும்பையில் காட்சியாக்க பட்டிருக்கும், இந்த பாடலின் காட்சிகளை பார்க்காமல் இருந்தால் கூட இது வடஇந்தியாவின் ஹிந்துஸ்தானி இசையை தழுவி செல்வதால் இது எங்கோ வடக்கில் நிகழும் காதலாகவே மனதில் பதியும், பாடல் முழுவதிலும் விரவி செல்லும் மெல்லிய தபல் ஓசை இதை நமக்கு உணர்த்தும்.ராகங்களை பற்றிய பெரிய ஞானம் இல்லாவிடிலும் இது தேஷ் ராகத்தில் அமைந்த பாடல் என்று அறிந்திருக்கிறேன். மனோ சித்ரா இருவரின் குரலும் இன்னும் அருமையாய் இழைந்து ராஜாவின் இசையில் மேலும் உருகி வழியும் மனதை நெகிழ்த்தும். சரணங்களின் நடுவில் ஒலிக்கும் புல்லாங்குழலின் மெல்லிய இழைவுடன் வீணையும் சேர்ந்து இந்த பாடலின் இசைக்கு சுவைகூட்டும்.
காதலின் மென்மையை உணர்த்தும் படி பாடலில் வந்து போகும் புறாக்கள், மழை, கடற்கரை, இரவு வெளிச்சத்தில் இந்திய நுழைவாயில், மழை ஒழுகும் வீட்டில் மனைவியை அணைக்கும் கணவன் என இவை யாவும் மேனகேடாமலே வெகு எதார்த்தமாய் காட்சியாக்க பட்டு இருப்பதற்கு இயக்குனர் மணியை பாராட்ட வேண்டும், எனக்கு தெரிந்து கனவிலோ நிஜதிலோ ஆடாமல் வெகு எதார்த்தமாய் படமாக்க பட்ட பாடல்கள் வெகு குறைவு அவற்றில் இந்த பாடலுக்கு தனி இடம் உண்டு என்றே எனக்கு தோன்றுகிறது.நிலவொளியில் கால்களில் அலைகள் விளையாட அமர்ந்து இந்த பாடலை கேட்க ஆசை பட்டிருக்கிறேன்,
இன்று வரை அது நிகழவில்லை எனினும் கூட்டத்துடன் நசுங்கி வழியும் பேருந்து பயணங்களில் கூட மனதில் கடற்கரை காற்றின் சிலுசிலுப்பை ஏற்படுத்திவிட முடிகிறது இந்த பாடலால்.
6 comments:
இது தேஷ் ராகமில்லை. தேஷுடன் நுண்ணிய வேறுபாடுடைய ஷ்யாம்கல்யாண் என்ற ஹிந்துஸ்தானி ராகம்.
இனியாள்,
மனோ - எஸ்.பி.ஷைலஜா குரல்களில் ரொம்ப அழகா அமைஞ்ச பாடல் இது.எனக்கும் பிடித்ததே..சரண்யாவோட இயல்பான நடிப்பு...அத்தனை அழகு அவர்கள் கொள்ளும் காதல்!!
நிச்சயமாக.
அதுவும் அந்தப் புறாக்கள்
ஒரே நேரத்தில்
மேலெழும்புவதும்..
அந்த இசையும்
எல்லாரையும் வசீகரிக்கும்.
Mika arumaiyaana padal...
அடுத்த பதிவு எப்போது
அது ஷைலஜாவின் குரலா..... இல்லை லேகா அது தெளிவான சித்ராவின் குரல் தான் மறுபடியும் கேட்டுபாருங்களேன். ஷைலஜாவின் குரலில் ஒரு சின்ன மாற்றம் உண்டு, இது குயிலின் குரல் ஆச்சே.
Post a Comment