சாலாட்சி நிதானமாய்
ஆத்துக்கு கிளம்பினாள் அவசரமாய் முடிக்க வேண்டிய சோலி எதுவும் இல்லை. காலைக்கு இட்லி போதும் நேற்று இரவு அரைத்து
வைத்த கார சட்டினி பூண்டு வாசத்தோடு அப்படியே இருந்தது அது பிள்ளைகளுக்கும்
அம்மாவிற்கும் ஆகும், அவளுக்கு இது தான் வேண்டுமென்று இல்லை தொட்டு கொள்ள மிளகாய்
பொடி கொஞ்சமிருந்தாலும் போதும் பார்த்து கொண்டே சாப்பிட்டு விடுவாள். இன்றாவது பெரிய கோவிலுக்கு போகணும் ‘இன்னைக்கு
சோமவாரம்லா’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு சேலை தலைப்பில் பத்து ரூபாய் நாணயத்தை
முடிந்து கொண்டாள், அவளுக்கு திருமணம் ஆவதற்கு முன் அடிக்கடி சிவன் கோவிலுக்கு
போவாள், ஏனோ கச முச கூட்டமில்லாத அந்த கோவிலின் அமைதி அவளுக்கு மிகவும்
பிடிக்கும். அப்பா இறந்து போனதிலிருந்து
ஏனோ அந்த சிவனை பார்க்கும் போதெல்லாம் அப்பாவின் நினைவு கிளர்ந்தெழும், திங்கள்
தவறாமல் காலையிலேயே ஆற்றில் குளித்துவிட்டு நெற்றியில் பட்டையோடு சிவனிடம் ஒரு
கும்பிடு போட்டுவிட்டு தான் சோற்றில் கை வைப்பார் அப்பா.
எல்லோரின்
துணிகளையும் வாளியில் போட்டு எடுத்து கொண்டாள், சோப்பையும் துண்டையும்
மாற்றுடைகளையும் எடுத்து கொள்ள சொல்லி
பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள், "எட்டி சாலா அங்கனையே எருமமாடு மாறி
நிக்காம சீக்கிரம் வந்து சேருங்க" என்று ஒரு அதட்டு போட்டு அனுப்பினாள்
அம்மா, அப்பா போன பிறகு அம்மா ஒத்தைக்கு தான் கடையை பார்த்து கொள்கிறாள் சாலா வந்த
பிறகு மதிய வேளை மட்டும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் படுக்க வருவாள், 'செத்த
குறுக்க சாச்சா எவ்வளவு நல்லா இருக்கு?" என்று சொல்லிக்கொள்வாள். ஆற்றுக்கு போக குதியாட்டம்
போட்ட படியே வந்தனர் குழந்தைகள். போகும் வழியெல்லாம் கிளிகளையும் வாத்துக்களையும் பார்த்து
ஏதேதோ சலசலத்தபடி வந்தனர் இருவரும், மகன் லோகேசு "எம்மா இங்கிட்டு சைக்கிள்
ஓட்டுனா எவ்வளவு நல்லா இருக்கும்?" என்று ஆசையாய் கேட்டான் "ஆமாடா
லோகு" என்று சொல்லி சிரித்தவள் அதற்கு மேல் அதை பற்றி பேசவில்லை. அவனுக்கு
சைக்கிள் வாங்கி தருவதெல்லாம் இப்போது நடக்கிற காரியமில்லை.
பூக்கடையில்
வியாபாரமில்லாமல் பூக்கட்டும் வேலையும் இல்லாமல் சாப்பிட கூட வக்கத்து போய் தான்
அம்மா வீட்டிற்கு வந்தது. அவள் கணவன் வைத்திருந்த ரோட்டோர பூக்கடை கொரோனா வந்ததால்
போட முடியாமல் போனது. சாலாட்சி பத்தாவது வரைக்கும் தான் படித்திருந்தாள் அதற்கு
மேல் அவளுக்கு படிப்பு ஏறவில்லை, அதையே கஷ்ட பட்டு தான் படித்தாள். அவள் அப்பா சிறிய மளிகை கடை
வைத்திருந்தார் பெரிய வருமானம் இல்லாவிட்டாலும் பிரச்சனை இல்லாமல் கழிந்தது
அவர்கள் பாடு, அவள் தங்கை கொஞ்சம் அதிகமாய் டிப்ளோமா வரைக்கும் படித்ததால்
மெட்ராஸில் ஏதோ பேக்டரி வேலையில் இருந்த மாப்பிள்ளைக்கு கட்டி கொடுத்திருந்தார்
அப்பா, அதோடு நிம்மதியுடன் போய் சேர்ந்துவிட்டார், அம்மா தான் வியாபாரத்தை
பார்த்துக்கொள்கிறாள் அவளுக்கும் வருமானத்திற்கு இதை விட்டால் வேறு எந்த தொழிலும்
தெரியாது.
சரவணனுக்கு கல்யாணம்
கட்டி கொடுத்து நன்றாய் தான் போய் கொண்டிருந்தது சாலாவின் வாழ்வு. ஆயிரம் பூவை
அரைமணி நேரத்தில் கட்டிவிடுவாள், பூவை அவள் கட்டும் வேகத்திற்கு அவள் கை
அசைவதையும், உதடுகளை மிக லேசாக சுளித்தபடி அவள் வைத்திருப்பதையும் ரசித்துப்
பார்ப்பான் சரவணன். இரண்டு குழந்தைகள் ஆன போதும் கட்டு செட்டாய் குடும்பம் நடத்தி
வந்தாள் சாலாட்சி. எல்லாவற்றையும் புரட்டி போட்டுவிட்டது கொரோனா. சரவணன் பாவம் காய்கறி கடையில்
வேலை பார்க்கிறான் அவனுக்கு மூட்டை தூக்குவதெல்லாம் பழக்கமில்லை ஆனாலும் இப்போது
அதை விட்டால் சம்பாதிக்க வேறு வழியில்லை. "பூக்கட்ட தான் வழி இல்லையே, சும்மா இங்கன கெடந்து
என்ன பண்ண போற, அங்க போய் உங்கம்மா கூட இருந்தா பிள்ளைகளுக்காச்சும் நல்ல சோறு
கிடைக்கும், நான் அப்படியே வெளில சாப்பிட்டுக்குறேன்" என்று வல்லாநல்லையாய்
அனுப்பி வைத்தான் சரவணன்.
“எம்மா இன்னைக்கு
தண்ணி கூட போகுதும்மா, முந்தாநேத்திக்கு நாம செருப்பை கழட்டி போட்ட படி வரைக்கும்
இன்னைக்கு தண்ணி வந்திட்டு பாரு” என்று ஆர்பரித்தாள் மீனா, “ஆமாடி” என்று
வியந்தவள், “ஏ லோகேசு பாத்து கவனமா குளிலே, தண்ணி இழுப்பு ஜாஸ்தியா இருக்குல்லா”
என்று மகனுக்கு பத்திரம் சொன்னாள், “சரிம்மா சரிம்மா” என்று தலையாட்டியபடியே
பனியனை கழட்டிவிட்டு ஆற்றுக்குள் குதித்தான் லோகேசு.
ஆற்றுக்குள்
இறங்கும் போது அந்த குளிர்ச்சியும் அவளுக்குள் இறங்கி சாலாவை புன்னகைக்க வைத்தது, மீனா
கப்பில் தண்ணீரை கோரி தலையில் ஊற்றி கொண்டது, "எம்மா எனக்கும் சோப்பு தாரியா நான் துணிக்கு
போடட்டா?" என்று பொறுப்பாய் கேட்டவளைப் பார்த்து பெருமைப்பட்டு கொண்டவள் "வேணாம்டி
நீ குளி" என்று சொல்லிவிட்டாள். இன்னைக்காச்சும் பெரியகோவிலுக்கு போகணும்
என்ற முடிவுடன் வேகமாய் துவைக்க துவங்கினாள் சாலா. துவைத்துவிட்டு படித்துறையை
கடந்து இறங்கி போய் அலசினாள், சேலையை அலச ஆளுக்கு ஆள் போட்டி போட்டன பிள்ளைகள்.
துணிகளை துவைத்து முடித்துவிட்டு
ஆற்றுக்குள் முங்கிய போது சரவணனை நினைத்து கொண்டாள். நீச்சல் அடித்து நடு ஆறு வரை
போய்விட்டு வருவான் சமயத்தில் ‘அக்கறை வரைக்கும் போகவா?’ என்று கேட்பவனை சாலா தான்
தடுத்துவிடுவாள் ‘எந்த இடத்துல சுளி கெடக்கோ எதுக்கு தேவையில்லாம’ என்று
பயப்படுவாள். அவனுக்கு ஆற்றில் குளிப்பதென்றால் கொள்ளை பிரியம் பாவம் எங்க மூட்டை
தூக்கிட்டு இருக்கோ என்று நினைத்து கொண்டாள். ஒரு நீர் பறவை இவளை கடந்து போனது
அதன் அலகில் இருந்த மீனை பார்த்து குதித்து சிரித்தாள் மீனா. படித்துறையில் அதிக
ஆட்கள் இல்லை மீனாவை படித்துறை பக்கமே இறங்க வைத்து குளிக்க வைத்து கரையேற்றியவள்,
குளித்த பின் மீண்டும் அலசிய சேலையை சுற்றி கட்டி கொண்டாள் மஞ்சள் துலங்கிய அவளின்
மாநிற முகம் ஆற்றில் குளித்ததில் சோபை கூடி தெரிந்தது.
கோவிலுக்குள்
நுழைந்து துவைத்த துணி அடங்கிய வாளியை வெளியில் வைத்து விட்டு, சந்நிதிக்கு உள்ளே
போனாள். நல்ல வேளை இன்னும் ஊரடங்கு போடலை இல்லாட்டி கோயிலுக்கு எங்கிட்டு வாரது
என்று நினைத்தபடி உள் நுழைந்த போது இவர்களின் வரவை கண்டு சடசடத்து பறந்தது இரண்டு
புறாக்கள். வெளவால்கள் எச்சமும் கருவறைக்கு வெளியில் எரிந்து கொண்டிருந்த
தீபத்தின் வாசமும் அந்த கோவிலின் பழமையை எடுத்துணர்த்தியது. ‘அப்பனே ஈஸ்வரா..’
என்று கன்னத்தில் போட்டு கொண்டவளின் மனதில் சரவணனுக்கான பிரார்த்தனைகள்
வரிசைக்கட்டின. சுற்றும் முற்றும் பூசாரியை தேடியவள் எங்கிட்டாவது போயிருப்பாரு
போல என்று நினைத்து பிரகாரத்தை வலம் வர தொடங்கினாள். இவளுக்கு முன்னால் குழந்தைகள்
வெளிச்சமான வெளி பிரகாரத்திற்கு ஓடி இருந்தன. பிரகாரத்தில் இருந்த பெரிய பலா மரத்தில் நாலைந்து
பலா காய்கள் சிறியதாய் தொங்கி கொண்டிருந்தன அதை பார்த்தபடி நின்றிருந்தன
குழந்தைகள்.
"வாங்க
பிள்ளேளா ஆச்சி தேடுவா" என்று வேகமாய் நடந்து பிரகார சுற்றை முடித்து
மீண்டும் ஒருமுறை கும்பிட்டு கிளம்ப போன போது, உள்ளிருந்து நாதஸ்வரத்தில் இசை
கசிந்தது, சாலா உள் நுழைந்தது தெரியாமல் "ஆயிரம் கண் போதாது.." வாசித்து
கொண்டிருந்தார் அந்த அண்ணன், தான் கிளம்ப வேண்டும் என்பதை மறந்து அப்படியே ஒரு
நிமிடம் நின்றுவிட்டாள் சாலா, "எம்மா போக வேணாமா?" என்று கேட்ட குழந்தைகளின்
வாயில் விரல் வைத்து அமைதியாய் இருக்கும்படி செய்கை செய்தாள் சாலா. அவர் வாசித்தது
எந்த பாட்டு என்றெல்லாம் அவளுக்கு பிடிபடவில்லை. யாருமற்ற அந்த அமைதியில் பிரகார
தோட்டத்து மரங்களின் இலைகள் அசைந்து சுருதி சேர்க்க அந்த நாதஸ்வரத்தில் இசை மனதை
என்னவோ செய்தது இமைகளின் ஓரத்தில் கசிந்து பெருகியது, அவர் வாசித்து முடித்து
நாதஸ்வரத்தை கீழே இறக்கிய நொடி அவர் முன்பு போய் நின்றவள் "அண்ணே என்ன
அருமையா வாசிச்சீங்க புல்லரிச்சு போச்சுண்ணே, என்கிட்டே குடுக்க ஒண்ணுமேயில்ல, தப்பா நினைச்சுக்காதீங்க
தயவு செஞ்சு இந்த பத்து ரூபாய வச்சுக்கோங்க, வீட்ல பிள்ளேலுக்கு பிஸ்கட் வாங்கி குடுங்க” என்றவள்
அவரிடம் அந்த நாணயத்தை கொடுத்துவிட்டு வீட்டிற்கு நடந்தாள். ஆற்றில் குளித்த
ஜில்லிப்பில் குளிர்ந்திருந்த அந்த நானயம் அப்படியே அந்த குளிச்சியை அவர்
மனதிற்குள் இறக்கியது, நூறு ரூபாய் தாள்களால் தரமுடியாத சந்தோஷத்தை அந்த ஒற்றை
நாணயம் தந்தது.
இந்துமதி கணேஷ்
0 comments:
Post a Comment