பரிசு



சாலாட்சி நிதானமாய் ஆத்துக்கு கிளம்பினாள் அவசரமாய் முடிக்க வேண்டிய சோலி எதுவும்  இல்லை. காலைக்கு இட்லி போதும் நேற்று இரவு அரைத்து வைத்த கார சட்டினி பூண்டு வாசத்தோடு அப்படியே இருந்தது அது பிள்ளைகளுக்கும் அம்மாவிற்கும் ஆகும், அவளுக்கு இது தான் வேண்டுமென்று இல்லை தொட்டு கொள்ள மிளகாய் பொடி கொஞ்சமிருந்தாலும் போதும் பார்த்து கொண்டே சாப்பிட்டு விடுவாள். இன்றாவது பெரிய கோவிலுக்கு போகணும் ‘இன்னைக்கு சோமவாரம்லா’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு சேலை தலைப்பில் பத்து ரூபாய் நாணயத்தை முடிந்து கொண்டாள், அவளுக்கு திருமணம் ஆவதற்கு முன் அடிக்கடி சிவன் கோவிலுக்கு போவாள், ஏனோ கச முச கூட்டமில்லாத அந்த கோவிலின் அமைதி அவளுக்கு மிகவும் பிடிக்கும்.  அப்பா இறந்து போனதிலிருந்து ஏனோ அந்த சிவனை பார்க்கும் போதெல்லாம் அப்பாவின் நினைவு கிளர்ந்தெழும், திங்கள் தவறாமல் காலையிலேயே ஆற்றில் குளித்துவிட்டு நெற்றியில் பட்டையோடு சிவனிடம் ஒரு கும்பிடு போட்டுவிட்டு தான் சோற்றில் கை வைப்பார் அப்பா.

 

எல்லோரின் துணிகளையும் வாளியில் போட்டு எடுத்து கொண்டாள், சோப்பையும் துண்டையும் மாற்றுடைகளையும் எடுத்து கொள்ள சொல்லி பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள், "எட்டி சாலா அங்கனையே எருமமாடு மாறி நிக்காம சீக்கிரம் வந்து சேருங்க" என்று ஒரு அதட்டு போட்டு அனுப்பினாள் அம்மா, அப்பா போன பிறகு அம்மா ஒத்தைக்கு தான் கடையை பார்த்து கொள்கிறாள் சாலா வந்த பிறகு மதிய வேளை மட்டும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் படுக்க வருவாள், 'செத்த குறுக்க சாச்சா எவ்வளவு நல்லா இருக்கு?" என்று சொல்லிக்கொள்வாள்.  ஆற்றுக்கு போக குதியாட்டம் போட்ட படியே வந்தனர் குழந்தைகள். போகும் வழியெல்லாம் கிளிகளையும் வாத்துக்களையும் பார்த்து ஏதேதோ சலசலத்தபடி வந்தனர் இருவரும், மகன் லோகேசு "எம்மா இங்கிட்டு சைக்கிள் ஓட்டுனா எவ்வளவு நல்லா இருக்கும்?" என்று ஆசையாய் கேட்டான் "ஆமாடா லோகு" என்று சொல்லி சிரித்தவள் அதற்கு மேல் அதை பற்றி பேசவில்லை. அவனுக்கு சைக்கிள் வாங்கி தருவதெல்லாம் இப்போது நடக்கிற காரியமில்லை.

 

பூக்கடையில் வியாபாரமில்லாமல் பூக்கட்டும் வேலையும் இல்லாமல் சாப்பிட கூட வக்கத்து போய் தான் அம்மா வீட்டிற்கு வந்தது. அவள் கணவன் வைத்திருந்த ரோட்டோர பூக்கடை கொரோனா வந்ததால் போட முடியாமல் போனது. சாலாட்சி பத்தாவது வரைக்கும் தான் படித்திருந்தாள் அதற்கு மேல் அவளுக்கு படிப்பு ஏறவில்லை, அதையே கஷ்ட பட்டு தான் படித்தாள்.  அவள் அப்பா சிறிய மளிகை கடை வைத்திருந்தார் பெரிய வருமானம் இல்லாவிட்டாலும் பிரச்சனை இல்லாமல் கழிந்தது அவர்கள் பாடு, அவள் தங்கை கொஞ்சம் அதிகமாய் டிப்ளோமா வரைக்கும் படித்ததால் மெட்ராஸில் ஏதோ பேக்டரி வேலையில் இருந்த மாப்பிள்ளைக்கு கட்டி கொடுத்திருந்தார் அப்பா, அதோடு நிம்மதியுடன் போய் சேர்ந்துவிட்டார், அம்மா தான் வியாபாரத்தை பார்த்துக்கொள்கிறாள் அவளுக்கும் வருமானத்திற்கு இதை விட்டால் வேறு எந்த தொழிலும் தெரியாது.

 

சரவணனுக்கு கல்யாணம் கட்டி கொடுத்து நன்றாய் தான் போய் கொண்டிருந்தது சாலாவின் வாழ்வு. ஆயிரம் பூவை அரைமணி நேரத்தில் கட்டிவிடுவாள், பூவை அவள் கட்டும் வேகத்திற்கு அவள் கை அசைவதையும், உதடுகளை மிக லேசாக சுளித்தபடி அவள் வைத்திருப்பதையும் ரசித்துப் பார்ப்பான் சரவணன்.  இரண்டு குழந்தைகள் ஆன போதும் கட்டு செட்டாய் குடும்பம் நடத்தி வந்தாள் சாலாட்சி. எல்லாவற்றையும் புரட்டி போட்டுவிட்டது கொரோனா. சரவணன் பாவம் காய்கறி கடையில் வேலை பார்க்கிறான் அவனுக்கு மூட்டை தூக்குவதெல்லாம் பழக்கமில்லை ஆனாலும் இப்போது அதை விட்டால் சம்பாதிக்க வேறு வழியில்லை. "பூக்கட்ட தான் வழி இல்லையே, சும்மா இங்கன கெடந்து என்ன பண்ண போற, அங்க போய் உங்கம்மா கூட இருந்தா பிள்ளைகளுக்காச்சும் நல்ல சோறு கிடைக்கும், நான் அப்படியே வெளில சாப்பிட்டுக்குறேன்" என்று வல்லாநல்லையாய் அனுப்பி வைத்தான் சரவணன்.

 

“எம்மா இன்னைக்கு தண்ணி கூட போகுதும்மா, முந்தாநேத்திக்கு நாம செருப்பை கழட்டி போட்ட படி வரைக்கும் இன்னைக்கு தண்ணி வந்திட்டு பாரு” என்று ஆர்பரித்தாள் மீனா, “ஆமாடி” என்று வியந்தவள், “ஏ லோகேசு பாத்து கவனமா குளிலே, தண்ணி இழுப்பு ஜாஸ்தியா இருக்குல்லா” என்று மகனுக்கு பத்திரம் சொன்னாள், “சரிம்மா சரிம்மா” என்று தலையாட்டியபடியே பனியனை கழட்டிவிட்டு ஆற்றுக்குள் குதித்தான் லோகேசு.

ஆற்றுக்குள் இறங்கும் போது அந்த குளிர்ச்சியும் அவளுக்குள் இறங்கி சாலாவை புன்னகைக்க வைத்தது, மீனா கப்பில் தண்ணீரை கோரி தலையில் ஊற்றி கொண்டது, "எம்மா எனக்கும் சோப்பு தாரியா நான் துணிக்கு போடட்டா?" என்று பொறுப்பாய் கேட்டவளைப் பார்த்து பெருமைப்பட்டு கொண்டவள் "வேணாம்டி நீ குளி" என்று சொல்லிவிட்டாள். இன்னைக்காச்சும் பெரியகோவிலுக்கு போகணும் என்ற முடிவுடன் வேகமாய் துவைக்க துவங்கினாள் சாலா. துவைத்துவிட்டு படித்துறையை கடந்து இறங்கி போய் அலசினாள், சேலையை அலச ஆளுக்கு ஆள் போட்டி போட்டன பிள்ளைகள்.

 

துணிகளை துவைத்து முடித்துவிட்டு ஆற்றுக்குள் முங்கிய போது சரவணனை நினைத்து கொண்டாள். நீச்சல் அடித்து நடு ஆறு வரை போய்விட்டு வருவான் சமயத்தில் ‘அக்கறை வரைக்கும் போகவா?’ என்று கேட்பவனை சாலா தான் தடுத்துவிடுவாள் ‘எந்த இடத்துல சுளி கெடக்கோ எதுக்கு தேவையில்லாம’ என்று பயப்படுவாள். அவனுக்கு ஆற்றில் குளிப்பதென்றால் கொள்ளை பிரியம் பாவம் எங்க மூட்டை தூக்கிட்டு இருக்கோ என்று நினைத்து கொண்டாள். ஒரு நீர் பறவை இவளை கடந்து போனது அதன் அலகில் இருந்த மீனை பார்த்து குதித்து சிரித்தாள் மீனா. படித்துறையில் அதிக ஆட்கள் இல்லை மீனாவை படித்துறை பக்கமே இறங்க வைத்து குளிக்க வைத்து கரையேற்றியவள், குளித்த பின் மீண்டும் அலசிய சேலையை சுற்றி கட்டி கொண்டாள் மஞ்சள் துலங்கிய அவளின் மாநிற முகம் ஆற்றில் குளித்ததில் சோபை கூடி தெரிந்தது.   

 

கோவிலுக்குள் நுழைந்து துவைத்த துணி அடங்கிய வாளியை வெளியில் வைத்து விட்டு, சந்நிதிக்கு உள்ளே போனாள். நல்ல வேளை இன்னும் ஊரடங்கு போடலை இல்லாட்டி கோயிலுக்கு எங்கிட்டு வாரது என்று நினைத்தபடி உள் நுழைந்த போது இவர்களின் வரவை கண்டு சடசடத்து பறந்தது இரண்டு புறாக்கள். வெளவால்கள் எச்சமும் கருவறைக்கு வெளியில் எரிந்து கொண்டிருந்த தீபத்தின் வாசமும் அந்த கோவிலின் பழமையை எடுத்துணர்த்தியது. ‘அப்பனே ஈஸ்வரா..’ என்று கன்னத்தில் போட்டு கொண்டவளின் மனதில் சரவணனுக்கான பிரார்த்தனைகள் வரிசைக்கட்டின. சுற்றும் முற்றும் பூசாரியை தேடியவள் எங்கிட்டாவது போயிருப்பாரு போல என்று நினைத்து பிரகாரத்தை வலம் வர தொடங்கினாள். இவளுக்கு முன்னால் குழந்தைகள் வெளிச்சமான வெளி பிரகாரத்திற்கு ஓடி இருந்தன.  பிரகாரத்தில் இருந்த பெரிய பலா மரத்தில் நாலைந்து பலா காய்கள் சிறியதாய் தொங்கி கொண்டிருந்தன அதை பார்த்தபடி நின்றிருந்தன குழந்தைகள். 

 

"வாங்க பிள்ளேளா ஆச்சி தேடுவா" என்று வேகமாய் நடந்து பிரகார சுற்றை முடித்து மீண்டும் ஒருமுறை கும்பிட்டு கிளம்ப போன போது, உள்ளிருந்து நாதஸ்வரத்தில் இசை கசிந்தது, சாலா உள் நுழைந்தது தெரியாமல் "ஆயிரம் கண் போதாது.." வாசித்து கொண்டிருந்தார் அந்த அண்ணன், தான் கிளம்ப வேண்டும் என்பதை மறந்து அப்படியே ஒரு நிமிடம் நின்றுவிட்டாள் சாலா, "எம்மா போக வேணாமா?"  என்று கேட்ட குழந்தைகளின் வாயில் விரல் வைத்து அமைதியாய் இருக்கும்படி செய்கை செய்தாள் சாலா. அவர் வாசித்தது எந்த பாட்டு என்றெல்லாம் அவளுக்கு பிடிபடவில்லை. யாருமற்ற அந்த அமைதியில் பிரகார தோட்டத்து மரங்களின் இலைகள் அசைந்து சுருதி சேர்க்க அந்த நாதஸ்வரத்தில் இசை மனதை என்னவோ செய்தது இமைகளின் ஓரத்தில் கசிந்து பெருகியது, அவர் வாசித்து முடித்து நாதஸ்வரத்தை கீழே இறக்கிய நொடி அவர் முன்பு போய் நின்றவள் "அண்ணே என்ன அருமையா வாசிச்சீங்க புல்லரிச்சு போச்சுண்ணே, என்கிட்டே  குடுக்க ஒண்ணுமேயில்ல, தப்பா நினைச்சுக்காதீங்க தயவு செஞ்சு இந்த பத்து ரூபாய வச்சுக்கோங்க, வீட்ல பிள்ளேலுக்கு பிஸ்கட் வாங்கி குடுங்க” என்றவள் அவரிடம் அந்த நாணயத்தை கொடுத்துவிட்டு வீட்டிற்கு நடந்தாள். ஆற்றில் குளித்த ஜில்லிப்பில் குளிர்ந்திருந்த அந்த நானயம் அப்படியே அந்த குளிச்சியை அவர் மனதிற்குள் இறக்கியது, நூறு ரூபாய் தாள்களால் தரமுடியாத சந்தோஷத்தை அந்த ஒற்றை நாணயம் தந்தது. 

இந்துமதி கணேஷ்



மாம்பழ தாத்தா


இரயில் ஜன்னலில் முகம் புதைத்தபடி வேகமாய் ஓடும் மரங்களையும் மின்கம்பிகளில் அமர்ந்திருக்கும் காக்கைகளையும் அதிசயமாய் பார்த்தாள் ஜனனி மூன்றே வயதான அவளுக்கு அந்த பயணம் அவ்வளவு ஆனந்தத்தை தந்தது. கருக்கலில் இருந்து விடியல் முழுமை அடையும் அழகை காண்பது அவ்வ்ளவு எளிதானது அல்ல. காப்பியின் ஒரு மிடரை ரசித்து குடித்துவிட்டு அடுத்த மிடருக்காக தலைகுனிவதற்குள் நிகழ்ந்திருக்கும் அன்றைய விடியல். விடுமுறைக்காக ஊருக்கு போகும்போது எல்லாமே அழகாய் தான் தெரியும் போல என்று புன்னகையுடன் நினைத்துகொன்டேன்.

நாங்கள் அம்பாசமுத்திரத்தில் இருக்கும் என்னுடைய அம்மா வீட்டிற்கு போய்க்கொண்டிருந்தோம். ஜனனியின் ஆச்சி வீடு சந்தடி நிறைந்த பேருந்து நிலையத்தின் அருகே இருந்தது. ஜனனியை பார்த்ததும் ஆச்சிக்கு அவ்வளவு மகிழ்ச்சி அம்மை எப்படி இருக்கா? என்று அவளை தூக்கியபடி உள்ளே சென்றாள் கொஞ்ச நேரத்தில் யாரோ வாசல் கதவை தட்டினார்கள். நான் போய் திறந்த போது வெற்றிலை காவி படிந்த பற்களை காட்டி சிரித்தபடி ஒரு வயதானவர் நின்றிருந்தார். தான் வாசலில் பழக்கடை போட்டிருப்பதாய் தன்னை அறிமுக படுத்திகொண்டு என்னை நலம் விசாரித்து விட்டு தண்ணீர் கேட்டார். நான் அம்மாவிடம் என்னம்மா புதுசா இருக்கு இவர் பழக்கடை போட்டிருக்காரா என்றேன் சும்மா யாரவது வண்டி நிறுத்துற இடம் தானே இவருக்காவது பயன்படட்டும்ன்னு கடை போட்டுக்க சொல்லிட்டேன் என்றாள் அம்மா. 

நான் தண்ணீர் புட்டியை திரும்ப குடுத்த போது மாம்பழம் வாங்கிக்கிடுத்தீங்களா என்றார், நான் பிறகு வாங்குவதாய் சொல்லி கதவடைத்தேன். அவர் வைத்திருந்த மாம்பழ வகை நான் அதிகம் ருசித்திராதது ஒரு வேளை அது புளிக்குமோ என்ற சந்தேகம் எனக்கிருந்தது. பதிவாய் மாம்பழம் வாங்கும் கடையில் அம்மா எங்களுக்காக மாம்பழம் வாங்கி வைத்திருந்தாள். 

ஒரு நாள் நல்ல ஓய்வுக்கு பின் நான் கொண்டு வந்திருந்த வீரயுக நாயகன் வேள்பாரியை வாசிக்க தொடங்கினேன். அந்த புத்தகத்தை பற்றிய மதிப்பீடுகள் எல்லாமே எனக்கு பெருத்த ஆர்வத்தை கிளப்பி இருந்தது அதை ஊரில் ஓய்வாய் தான் படிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது எனக்கு. நான் வேள்பாரியில் மூழ்கி இருந்த நாட்களில் ஜனனி மாம்பழ தாத்தாவிற்கு ப்ரிய பேத்தியாகி போனாள். நான் வாசலுக்கு போனாலே மாம்பழம் வாங்க சொல்லி கேட்பார் தாத்தா நானும் நாளைக்கு என்று சிரித்தபடி சொல்லி வந்தேன். இதற்கிடையில் முதல் புத்தகத்தை முடித்து விட்டு அடுத்ததற்கு வந்திருந்தேன். ஜனனியை ஆச்சியிடம் விட்டிருந்ததால் அசுரர் வேகத்திற்கு சென்றது வாசிப்பு.

அங்கவையும் உதிரனும் கிளிமூக்கு மாம்பழங்களுக்காய் வெகு தூரம் பயணித்த பகுதிகளை வாசித்து விட்டு பிரமிப்பு அகலாமல் வாசல் தெளிக்க வந்த போது மீண்டும் கிளிமூக்கு மாம்பழமே கண்களில் விழுந்தது எப்போதும் போல் அப்போதும் மாம்பழம் வாங்கிக்கிடுறீங்களா? என்றார் தாத்தா,சரி என்று தலையசைத்த உடன் ஒரு பழத்தை எடுத்து கழுவி வெட்டி ஜனனிக்கு எனக்கும் தந்தார் தேனாய் இனித்தது பழம். 

ஒரு கிலோ வாங்கிவிட்டு காசு கொடுத்தால் வாங்க மறுத்தார். அவர் எங்களுக்கு காசிற்காக மாம்பழம் விற்க நினைக்கவில்லை. அவரின் வாஞ்சையை காட்ட அது ஒரு வழி அவருக்கு. பல நேரம் கைக்கு அருகில் இருக்கும் அறிய விஷயங்களின் மதிப்பை அறிவதில்லை நாம். அவரின் கையை பிடித்து அன்பாய் நாலு வார்த்தை பேசினால் இயல்பாய் இருக்காது அவருக்கு,"ஏயப்பா நல்ல இனிப்பா இருக்கே நீங்க தார பழமெல்லாம்" என்ற ஒரு வார்த்தை போதும் அவரை மலர வைக்க.

அடுத்த விடுமுறைக்கு நாங்கள் ஊருக்கு போன போது ஜனனி மாம்பழ தாத்தாவை கேட்டாள் அவர் வருவதே இல்லை என்றார் அம்மா. அவரை பற்றி எந்த விவரமும் தெரிந்திருக்கவில்லை எங்களுக்கு. எங்கள் முற்றத்தை அழகாக்கிய அற்புதமான மார்கழி கோலம் அவர் கோலத்தை இன்னும் அழகாக்க வைத்த பூசணி பூவாய் சில கிளிமூக்கு மாம்பழங்கள்

பிரிவும் பிரிவின் நிமித்தமும்.......






உன் ஆற்றாமைக்கும்
என் இயலாமைக்கும் இடையே
ஓடிக்கொண்டிருக்கிறது நம் பிரிவு
ஓயாமல் பேசி சிரித்த உதடுகளில்
இப்பொழுது வார்த்தைகளற்ற மெளனங்கள்
தூசி படிந்த இருச்சக்கர வாகனம்
தேய்க்க படாத சந்தன சோப்பு
சுவைக்க ஆளில்லாமல் வீணாகும் இனிப்புகள் இவைகளுடன்
உன் விரல் பற்றி உலகம் சுற்ற மகனும்
தன் பிஞ்சு கால்களால் உன் மார்புதைக்க மகளும்
உன் செல்லக் குறும்புகளை ரசிக்க நானும்
விழிகளில் நேசப்பூக்களுடன் காத்திருப்போம்















நீ இல்லாத வாழ்க்கை
எனக்கு இருட்டானது தான்
அதை நிரூபிக்க
மழையும் புயலும்
அதனால் போன மின்சாரமும் தேவையில்லை




ஏறு தழுவுதல்

















ஏறு பிடித்து வீரம் காட்டினான் ஆண்
அவன் மனதை படித்து நாணத்தில் திளைத்தாள் பெண்

தெம்மாங்கு பாடி நாத்து நட்ட காலம் ஒன்று
தெருவாசல் கோலமிட இடமில்லை இன்று

பயிர்களை தழுவி மகிழ்ந்தான் உழவன் அப்போ
அவன் மரணத்தை தழுவிய செய்தியறிகிறோம் இப்போ

ஏறு தழுவ தடை விதித்தது அரசு
அதை உடைக்க பாடுபட்டு ஊரெங்கும் முழங்குது முரசு

அரிசி சர்க்கரை ஏலத்தோட
பொறுமையும் போராட்டமும் சேர்த்தோம் பொங்கலோடு

பொங்கியது புரட்சி பொங்கல்
மெரினாவில் தங்கியது பல இளைய தலைகள்

ஜாதி மத குலம் துறந்து வந்தோம் வீதிக்கு
தடையை தகர்த்து எறிவதே எங்கள் இலக்கு

தமிழனே அமைதியாய் புரிந்தாய் நீ பல புரட்சிகள்
அதற்கிந்த எளிய தமிழச்சியின் அன்பு வணக்கங்கள்

குழந்தைகள் வளர்ந்துவிடுகிறார்கள் .....
















ஆச்சி வீட்டுக்கு ஆசையாய் கையாட்டி
சென்ற மகன் வளர்ந்து விட்டான் !
நேரத்துக்கு சாப்பிட்டானா
சரியாக தூங்குவானா
என்று கவலை பட்டு தூக்கம் தொலைத்து
அவன் பொம்மையை அணைத்தபடி
உறங்கும் நான் என்று  வளரபோகிறேன்? 

குறும்புக்கண்ணன்


அன்று காலையிலேயே நான் குளித்து மலர்ச்சியோடு காப்பியை நீட்டியதுமே என் கணவர் கேட்ட முதல் கேள்வி, 'இன்னைக்கு என்ன விசேஷம் ?' என்பது தான். 'நேத்தே சொன்னேன்ல இன்னைக்கு கிருஷ்ண ஜெயந்தி பா, உங்களுக்கு எந்த நல்ல  லீவு இல்லை பின்ன எப்படி ஞாபகம் இருக்கும் ' என்றவுடன் சரி சரி கூல் என்றபடியே குளிக்கசென்றுவிட்டார். அலுவலகம் போகும் முன் முடிஞ்சா குட்டி செல்லத்துக்கு கிருஷ்ணர் வேஷம் போட்டு போட்டோ எடு என்று சொல்லிவிட்டு சென்றார்.

கிருஷ்ணர் வேஷம்  தானே பெரிதாய் ஒன்றும் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை என்று நினைத்தது எவ்வளவு தவறு என்று என் ஒண்ணே கால் வயதே நிரம்பிய மகன் நிரூபித்தான்.முகத்தில் கண்மை போட்டு ஒரு நாமத்தை போட்டால் பாதி வேலை முடிஞ்சு போச்சு, ஆனால் குளித்து  முடித்து  வெளியில்  வரும் போதே பசியில்  அழுததால் போட முடியாமல் போனது, தூங்கியதும் போடலாம் என்று எண்ணியதை எப்படியோ அறிந்து கொண்டு அன்று பார்க்க அவன் சிறிதும்  விழி மூடாமல் என்னை சோதித்தான்

அம்மாவுக்காவது எதாவது பட்சணம் செய்ய உதவலாம் என்று   சமையல் அறைக்குள் நான் நுழையும் முன்னரே அவன் ஓடி அங்கு பொடித்து வைத்திருந்த வெல்லத்தை தரை எங்கும் சிதறடித்து  கையால் மேலும் தட்டி  சிரித்து கொண்டு இருந்தான், என் அம்மாவின்  மிரட்டல்களுக்கு சற்றும் செவி சாய்க்காமல் அவன் வேலையை கருத்தாய்  செய்து கொண்டிருந்தான். அவனை தூக்கி  கையை கழுவி  அனுப்பி வைத்துவிட்டு  மேடையில் இருந்த மற்ற சாமான்களை   தள்ளி வைத்து விட்டு  திரும்பி பார்த்தால்  அவன் கையில் எண்ணை கிண்ணம், எந்த   நேரமும்  வழிய தயாராய் அபாய நிலையில் இருந்த கிண்ணத்தை ஓடி போய் வாங்கி  வைப்பதற்குள் எனக்கும் அம்மாவுக்கும் மூச்சு முட்டி அம்மா என்னிடம் தாயே நீ எனக்கு ஒரு உதவியும் செய்ய வேணாம் உன் மகனை பாத்துக்கோ போதும் என்று ஒரு கொடையை எனக்கு அளிக்கும் படி செய்த்தான்.

சரி இனி நேரம் தாழ்த்தி பிரயோஜனம் இல்லை கழத்தில் இறங்கி விட வேண்டியது தான் என்று எண்ணி அவன் பின்னாடியே ஓடி எதிர் வீட்டு அக்கா, பின் வாசல் கொய்யா மரம் பூனை என்று எதை எதையோ சொல்லி  சாந்து  பொட்டால் ஒரு நாமத்தை போட்டு விட்டு, அடுத்த ஸ்டெபான பெரிய வெள்ளை நாமம போட பௌடரை  கரைப்பதர்க்குள் அவன் நெற்றி கைகள்  செவ்வானமாய் சிவந்தது கிடந்ததது.குளிக்கும் போதே முகம் துடைப்பதற்குள் உலகம் ரெண்டு படும் இப்போது கேட்கவும் வேண்டுமா, பேசாமல் ஒரு துணியில் தண்ணீரை  நனைத்து துடைத்துவிடலாம் என்று எண்ணி அவனை அமர வைக்க டிஸ்கவரியில் புலியையோ சிங்கத்தையோ தேடினால் நாலு நாட்களுக்கு முன் இறந்து போயிருந்த எதோ ஒரு பிராணியை வாயில் போட்டு கொண்டிருந்தான் சற்று முன் சாப்பிட்ட தயிர் சாதமும் மாங்காய் ஊர்காயும் வெளிவரும் முன் சேனலை மாற்றி விட்டு திரும்பி  பார்த்தால் அவன் மாடி படி ஏறி இருந்தான், அவன் பின்னாடி அவசரமாய் ஓடி அவனுக்கு துடைத்து முடிப்பதற்குள் நான் சீக்கிரமே கரிஸ்மா கபூர் அளவுக்கு மெலிந்தது விடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.அரை மணி நேரம் ஆகியும் தொடங்கிய அதே இடத்தில் நான்.


ஓடிக்கொண்டிருந்த பொது எனக்கு ஒரு யோசனை, பாரின் போன என் சித்தப்பா பையன் வாங்கி தந்த மேக்கப் கிட்டில் உள்ள உதட்டுசாயத்தை பேசாமல் நாமம் போடா பயன்படுத்தலாமே என்று தோன்றிய உடன் அதை தேடி கண்டு அந்த கிட்டை அவன் கையில் கொடுத்து(மூடி தான்) அந்த நேரத்தி லே நாமத்தை போட்டு முடித்தேன். வெள்ளை நாமம் போட்டு உள்ளதையும் சொதப்பி தொலைக்க வேண்டாம் என்று அதை கைவிட .முடிவு எடுத்தேன்.இனி முகத்திற்கான முக்கியமான கடைசி மேக்கப், கண்மை போடுவது.

கண்மை போட்டு முடிப்பதற்குள் பாதி பாத்திரங்கள் சமையல் அறையில் இருந்து வீட்டின் சகல மூலைகளுக்கும் இடம் மாறி இருந்தது, இந்த சாகசத்தில் ஈடுபட்டு நானும் கொஞ்சம் கருப்பாகி இருந்தேன், காதில் கொய் என்று சத்தம் வேறு பாத்திரங்களில் கரண்டிகளை கொண்டு தட்டி அந்த இசையை ரசித்து  பெருமையாய் சிரித்த அவனை பாராட்டி ஒரு முத்தத்தை கொடுத்து விட்டு நகைகளை போட  முடிவெடுத்தேன்.

இரண்டு செயின்களை சுலபமாய் போடு விட்டு கொஞ்சம் சின்னதாய் இருந்த முத்து மாலையை போட்டு முடிப்பதற்குள் ஓடினான், மாலை கிரீடம் போல அவன் தலையில் நின்றது அட அதை அப்படியே விட்டால் கூட அருமையாய் இருக்கும் போல என்று நினைபதற்குள் அது அவன் கைக்கு வந்து சுழற்றி எறியப்பட்டது, அவன் எறிந்த வேகத்தில் அது சிதறாமல் தப்பித்ததே பெரும் பாகியம்.எனினும் விக்ரமாதித்யன் போல சற்றும் மனம் தளராமல் மாலையை மறுபடியும் அவன் தலையில் வைத்தால் அது வழுக்கி கொண்டு கழுத்தில் விழுந்தது. கையில் ப்ரசெலேட் போடலாம் என்றால் ஆறு மாதம் முன் வாங்கிய அது பத்தாமல் போய் பாடாய் படுத்தியது.சரி இத்துடன் நகைகளை முடித்து கொண்டு உடைக்கு சென்றேன்.

ஏற்கனவே ரெடிமேடில் அவனுக்கு பஞ்சகசம் இருந்தது ஆனால் அது சிகப்பு நிறம், வெள்ளையில் கட்ட பட்டு துண்டும் எட்த்து வைத்து அதை கட்ட அம்மாவை அழைத்தேன், நானும் அம்மாவும் பத்து நிமிடமாய் முயன்று தோற்று கடைசியில் கண்ணனுக்கு சிகப்பும் பிடிக்குமே என்று சொல்லி மனதை தேற்றி கொண்டு சிகப்ப பஞ்சகச்சத்தையே போட்டு என்னுடைய நீண்டநேர மேக்கப் செச்ஷுனை முடித்துக்கொண்டேன்.கிரீடம்  ஒன்று இருந்தது ஆனால் அதை அவன் தலையை தவிர எல்லா இடங்களிலும் வைத்தான்,கண்ணனுக்கு குழல் வேண்டுமே அது இல்லையே என்ற நினைத்து வருந்தும் போது அவன் என் செல்போனை எடுத்து வைத்திருந்தான், ஆகா இவன் கலியுக கண்ணன் அல்லவா செல்போன் போதும் இவனுக்கு என்று எண்ணி கேமராவுடன் கழத்தில் இறங்கினேன்.

அவ்வளவு நேரம் சிரித்து சிரித்து விளையாடியவன் அப்போதில் இருந்து சிரிக்காமல் என்னை சோதித்தான்.வெகு நேரம் முயன்றும் வேறு வழி இல்லாமல் ஒரு போட்டோவை எடுத்து முடித்து விட்டு பார்த்தால் அவனை சுற்றி ஒரே ஈரம், ஆகா டியபர் போடா மறந்தோமே என்று நொந்தபடி மேலும் இரு தூரத்து ஷாட்களை எடுத்து மென் கிருஷ்ண ஜெயந்தி சாகசங்களை முடித்து கொண்டேன். அம்மா கண்ணன் பாதங்கள் வைக்கணும்டி அப்ப தான் இணைக்கு நாள் நிறையும் என்று சொன்னதால் மாவால் பாதம் போட போட இவன் அதை இழுவி அளித்து மேற்கொண்ட  செய்த செயல்களால் வேறு வழி இல்லாமல் சாக்பிஸ் கொண்டு பாதம் போட்டோம். நல்ல வேளை என் கணவரின் ஐடியா படி அவன் கால்களில் மாவை முக்கி பாதம் போட்டிருந்தால் வீடே மாவாகி இருக்கும்.

இரவில் வீடு வந்த கணவரிடம் போடோக்களை காட்டி மகன் செய்த சேட்டைகளை சொன்னேன், இவ்வளவு முயன்றும் கண்ணனை போல இவன் இல்லையோ என்று நான் கேட்ட போது அவர் சொன்னார் கண்ணனுக்கு அழகு அவன் அணிந்த ஆபரணங்களில் இல்லை அவன் செய்த குறும்புகளில் தான் அதனால் நம் கார்த்தி குட்டி குறும்பு கண்ணன் தான் நி கவலை படாதே என்றார்.இதை விட வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும் இந்த யசோதைக்கு.

நினைவு நதியில்...



இப்போது மணிக்கணக்கில் தொலைக்காட்சி முன் அமர்ந்து கார்டூன் பார்க்கும் குழந்தைகளை பார்க்கும் போது சில வேளை என் பால்யம் எனக்கு ஞாபகம் வரும் . இப்போது அளவுக்கு அதிகமாய் டிவி பார்ப்பதால் அவர்களுக்கு எதுவுமே புதிதாய் அதிசயமாய் தெரிவதில்லை. அப்போதெல்லாம் டிவி பார்ப்பது என்பது விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு போவது போல சுவாரஸ்யமாக விஷயம், எப்போதாவது தான் பார்க்க முடியும்.

எந்நேரமும் நகைச்சுவை, பாடல்கள் என்று தனியாக பார்க்க சேனல்கள் கிடையாது எதுவாக இருந்தாலும் ஒரே தூர்தர்ஷனில் தான் பார்த்தாக வேண்டும்.வெள்ளி கிழமை ஒலியும் ஒளியும் பார்பதற்காகவே எத்தனையோ நாட்கள் விளையாட்டை நிறுத்தி, வீட்டு பாடங்களை முன்னவே எழுதி தயாராய் இருந்திருக்கிறோம், அப்படி தயாராய் காத்திருக்கும் போதிலும் திடீர் என்று தடங்கலுக்கு வருந்திகிறோம் என்று பல நிறங்கள் கொண்ட பலகை வரும் போது சில நாட்கள் அழுகை கூட வந்ததுண்டு, இதையும் மீறி நல்ல பாடல்கள் போடும் போது தொலைக்காட்சி சரியாய் தெரியாமல் புள்ளியடிக்கும், அதை சரி செய்ய அப்பாவை மொட்டை மாடிக்கு அனுப்பி கீழ் இருந்து இப்போ பரவாஇல்லை என்று கத்தி அப்பாவை கீழே அழைத்து முடிப்பதற்குள் பாடல் முடிந்திருக்கும்.

சனி கிழமை வந்தாலே இன்று இரவு என்ன படம் போடுவானோ என்ற பரபரப்பிலேயே அழகாய் தொடங்கும் காலைகள், அவன் சலித்து போகும் அளவுக்கு விளம்பரங்களை போட்டு படத்தை முடிக்கும் போது கண் நிறைய தூக்கத்துடன் இரவு சுமார் ஒரு மணி ஆகி இருந்தாலும் அடுத்த சனி கிழமை அதெல்லாம் மறந்து போய் இருக்கும். அப்படி நள்ளிரவு வரை சிரித்து சிரித்து ரசித்த படங்கள் இன்று பார்த்தாலும் அலுக்காத 'தில்லு முல்லு', 'சிம்லா ஸ்பெஷல்', 'திருவிளையாடல்' இப்படி அடுக்கி கொண்டே போகலாம். ஞாயிறு காலை பத்து மணிக்கு போடும் மகாபாரதம் பார்க்க, எதிர் வீட்டில் இருக்கும் என் ஆச்சி வருவார்கள், எப்போதுமே எதிரில் இருந்தாலும் அதென்னமோ மகாபாரதம் பார்க்கும் போது தான் எல்லாரும் அதிக நேரம் எங்கள் வீட்டில் இருப்பார்கள். அனேக ஞாயிறு காலைகளில் அடை தோசை தான் இருக்கும், பட்டாசலில் மண்ணெண்ணெய் அடுப்பு வைத்து ஆச்சி தோசை ஊத்தி கொடுக்க நாங்கள் மகாபாரதம் பார்த்த படியே சாப்பிடுவோம். எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து அப்படி சாப்பிடுவதே பெரிய கொண்டாட்டமாய் தெரியும் எங்களுக்கு.

இது இல்லாமல் காலை எழுந்த உடனேயே அநேகமாய் போட பட்டிருக்கும் ரேடியோக்கள் வேறு நம்மை இன்னும் குஷி படுத்தும். நெல்லை வானொலியில் புது சினிமா பாடல்களை அரிதாய் தான் போடுவார்கள். புது பாடல்களை கேட்பதெனில் கண்டிப்பாய் சிலோனில் கேட்டு தான் அறிமுகம் எங்களுக்கெல்லாம். புது பாடல்களை முதலில் கேட்கும் போது அதற்கான காட்சிகள் இப்படி தான் இருக்கும் என்று ஒரு கற்பனை வரும், படம் போய் பார்த்த உடன் சில நேரம் அதைவிட நன்றாகவோ அல்லது கற்பனைக்கும் பாடல் காட்சிகளுக்கும் சம்மந்தமே இல்லாமலோ இருப்பது கூட சுவாரஸ்யமாய் தான் இருக்கும். அப்படி நிறைய கற்பனை செய்து ஏமாந்து போன பாடல் நிறைய உண்டு. பாடல்களுக்கு இடையில் அதை விரும்பி கேட்டவர்களின் பெயர்களை ஊர் பெயருடன் சொல்வார்கள், அந்த அறிவிப்பாளர்களின் உச்சரிப்பில் பெயர்பட்டியல் கூட கேட்பதற்கு அருமையாய் தான் இருக்கும்.

நகைச்சுவை காட்சிகள் சிலவற்றை ஒலிபரப்புவார்கள், வெறும் வசனம் தான் எனினும் அந்த நாட்களின் அதை கேட்பதற்கே அப்படி அலைபாய்வோம். அதிலும் தங்கவேலுவின் 'கல்யாண பரிசு' மன்னாரன் கம்பெனி நகைச்சுவையும், திருவிளையாடலில் நாகேஷ்-சிவாஜி உரையாடலும் சிலோனில் தான் முதல் முதல் கேட்டிருக்கிறேன், அதற்கு பின் பார்த்த போது இன்னும் சுவாரஸ்யம் கூடியதே தவிர குறையவில்லை. சனி கிழமை காலைகளில் வைரமுத்து அவரின் கவிதை தொகுப்பில் இருந்து எதாவது ஒரு கவிதையை வாசிப்பார். என் பள்ளி நாட்களில் எல்லாம் எனக்கு கவிஞர் எனின் பெரிய அறிஞர், அது வைரமுத்து தான், எனவே அவர் வாசித்து முடித்தவுடன் தான் நான் பள்ளி கிளம்புவேன்.

சிலோனில் போடும் விளம்பரங்கள் வேறு நகைச்சுவையாய் இருக்கும், சிங்கம் மார்க் குடைக்கு, 'அண்ணா நடை சின்ன இடை சிங்கம் மார்க் குடை ஆஹா சிங்கம் மார்க் குடை' என்று பாடும் போது காலை பரபரப்பிலும் சிறுப்பு பொத்து கொண்டு தான் வரும். இப்போதெல்லாம் சிலோனே ரேடியோவில் கூட அந்த நாட்களில் அறிவித்தவர்களை போல அற்புதமான அறிவிப்பாளர்கள் இல்லை. அப்படியே இருந்தாலும் அந்த பழைய உற்சாகம் நிச்சயமாய் வரபோவதில்லை. மீண்டும் அந்த பழைய நாட்களுக்கு போக முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

Tamilish