காதலால் விழுந்தேன்எனக்கு நிகழ்ந்த ஒரு வித்தியாசமான அனுபவம் இது, இதை பற்றி நினைத்து பார்க்கும் போது இன்றும் இது நமக்கு தான் நிகழ்ந்ததா என்று நம்ப முடியாத ஒரு தன்மை என்னுள் படரும். கேட்க்கும் எவரும் இதுவரை நம்பியதில்லை, இப்படி உங்களுக்கு நடந்திருக்க வாய்ப்பே இல்லையே என்று தான் சொல்வார்கள், காதல் மனிதனை படுத்தும் பாட்டில் நான் மட்டும் என்ன விதி விலக்கா.

அப்போது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருந்தேன், என் கல்லூரியில் விடுமுறை ஆரம்பித்து இருந்தது, அந்த நாட்களிலும் எங்களை எதாவது ஒரு தொழில் பயிற்சி செய்தது சான்றிதழுடன் தான் நீங்கள் வர வேண்டும் என்று நிபந்தனை இட்டிருந்தார்கள்(படுத்தினார்கள்) , நானும் அதற்காய் திருநெல்வேலியில் இருந்த என் சித்தி வீட்டில் தங்கி பயிற்சிக்கு சென்று வந்தேன், அன்று ஒரு சனி கிழமை என்னுடைய பயிற்சியின் இறுதி நாள் , சில மணி நேரம் இருந்தாலே போதும் அன்று அதனால் மதியம் இரண்டு மணி போல கிளம்பி ஒரு பேருந்தில் (10 நிமிஷங்கள் தான்) ஏறி என் பயிற்சி அலுவலகம் இருக்கும் நெல்லை சந்திப்புக்கு சென்றேன்.

இறங்கிய உடனேயே என்னை சிஸ்டர் என்று ஒருவர் அழைத்தார், நின்று என்னை தான என்று திரும்பி பார்த்தேன்(இது தான் மிகபெரிய தப்பு), ஒரு அடையாள அட்டையுடன் என்னிடம் வந்தார்.வந்தவர் சிஸ்டர் நான் ஒரு அரசு மருத்துவன், எனக்கு ஒரு அவசர உதவி செய்ய முடியுமா என்று கேட்டார், என்ன உதவி என்று கேட்டேன். அவர் அதற்கு என் தோழியுடன் நான் சினிமாவிற்கு வந்தேன் அவள் ஒரு முஸ்லிம் அவளுடைய உறவினர்கள் இங்கே வந்திருப்பதால் என்னுடன் வந்தால் அவர்கள் அவளை திட்டுவார்கள் ஆகையால் நீங்கள் என்னுடன் அவள் இருக்கும் இடத்திற்கு வந்து
அவளை இதே இடத்தில விட்டு விடுங்கள் அவளே போய் விடுவாள் என்று சொன்னார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை முதல், இது நமக்கு தேவை இல்லாத தொல்லை என்று தோன்றியது எனினும் பயம் வரவில்லை. எதற்காக இப்படி எல்லாம் சினிமாவிற்கு வந்து மாட்டி கொள்ள வேண்டும் என்று கேட்டு விட்டு எங்கே இருகிறார்கள் என்று கேட்டேன். அவர் உடனே இதோ இங்கே தான் அருகில் என்று எனக்கு தெரிந்த ஒரு இடத்தை சொன்னார்.

சரி என்று அவருடன் சென்றேன்(இதை தான் தொல்லையை தோளில் தூக்கி போட்டு கொள்வது என்பது), போகிற வழியில் தான் அந்த பெண் இவரின் காதலி என்பதே எனக்கு புரிந்தது (என் வெள்ளந்தியான மனசுக்கு நட்பை காதல்னு தப்பாய் பார்க்க கூடாது என்று தடை வேறு போட்டு வைத்திருந்தேன்). அதுவும் அந்த காதல் வெகு சிக்கலான ஒரு கதையாய் போய் கொண்டிருப்பதை அந்த மருத்துவர் என்னிடம் சொன்னார். அவருடைய அப்பா இதற்காய் தற்கொலை செய்து கொண்டதாகவும், அந்த பெண்ணை அவர்கள் வீட்டில் கொடுமை படுத்தி அவள் மாமாவிற்கே கட்டி வைக்க முயல்வதாகவும், இதை எதிர்த்து இவர் அவளை கூட்டி கொண்டு ஓட அதனால் கத்தி குத்து வாங்கிய காயத்தை எனக்கு காட்டினர். அப்போது தான் நான் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டி இருக்கிறேன் என்ற பயம் எனக்கு வந்தது, உடனே என்னை தயவு செய்தது விட்டு விடுங்கள் நான் போய் விடுகிறேன் நீங்களே உங்கள் காதலியை பார்த்து கொள்ளுங்கள் என்று சொன்னேன், அவர் அதற்கு இல்லை சிஸ்டர் எனக்காக தயை கூர்ந்து அவளை (பதிவாளர் அலுவலகம் இருக்கும் இடத்தை சொல்லி) அங்கே மட்டும் கொண்டு விட்டு விட்டு சென்று விடுங்கள் மற்றதை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொன்னார. எனக்கு பயம் ஒரு புறம் இருந்தாலும் அப்போது தான் பூவே உனக்காக படம் வந்த புதிது, அதனால் நாமும் காதலை சேர்த்து வைப்போமே என்ற எண்ணத்தில் சரி என்று விட்டேன். இதற்கு பின் தான் கில்லி படத்தில் வருவதை போன்ற பல சுவாரஸ்யமான காட்சிகள் எல்லாம் வந்தது.

3 comments:

பனித்துளி சங்கர் said...

கடந்த அனுபவத்தை மிகவும் நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள் . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி

தமிழ் உதயம் said...

இதற்கு பின் தான் கில்லி படத்தில் வருவதை போன்ற பல சுவாரஸ்யமான காட்சிகள் எல்லாம் வந்தது.


தொடருங்கள். சஸ்பென்ஸா. அல்லது அவ்வளவு தானா.

இனியாள் said...

நன்றி ஷங்கர் மற்றும் உதயாவிற்கு, பெரியதாய் இருந்ததால் இரண்டு பதிவாக்கினேன். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.