என் இழுப்பறையில் வசிக்கும் அவைகளுக்கு
கனிவாய் பேசவும்
பரிவாய் தலைகோதவும்
பிரியமாய் ஊக்க படுத்தவும்
அக்கறையாய் புத்தி சொல்லவும்
நன்றாக தெரியும்
இழுப்பறையை திறக்கும் போதெல்லாம்
குழந்தையை போல்
கை ஆட்டி அழைத்து
தன்னை தூக்க சொல்லும்
கையில் வந்த உடன்
பழங்கதைகள் பேசி சிரிக்க வைக்கும்
பாசம் பேசி இமை நனைக்கும்
என் கால்களை பறித்து
சிறகை பொருத்தி விட்டு
வாய் பொத்தி குலுங்கி சிரிக்கும்
பச்சை மசியில்
ஆங்கில கூட்டெழுத்தில் அப்பாவையும்
பத்திக்கு பத்தி நிற்க என்று முடித்து வடிவான
எழுத்தில் அம்மாவையும்
பொடி எழுத்தில் தோழியையும்
என்னிடம் அழைத்து வரும்
அது வெறும் கடிதமல்ல
நீங்காமல் ஒலிக்கும் நேசத்தின் இசை.

3 comments:

Madumitha said...

அந்த நீல நிறப் பறவைகள்
பறந்துவிடாமல் தங்களிடமே
தங்கி இருப்பது ஆச்சர்யம் தான்.

பனித்துளி சங்கர் said...

மிகவும் அருமையான சிந்தனை . அழகாக எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் !

S Maharajan said...

//ஆங்கில கூட்டெழுத்தில் அப்பாவையும்
பத்திக்கு பத்தி நிற்க என்று முடித்து வடிவான
எழுத்தில் அம்மாவையும்
பொடி எழுத்தில் தோழியையும்
என்னிடம் அழைத்து வரும்
அது வெறும் கடிதமல்ல
நீங்காமல் ஒலிக்கும் நேசத்தின் இசை//

arumai