மாம்பழ தாத்தா


இரயில் ஜன்னலில் முகம் புதைத்தபடி வேகமாய் ஓடும் மரங்களையும் மின்கம்பிகளில் அமர்ந்திருக்கும் காக்கைகளையும் அதிசயமாய் பார்த்தாள் ஜனனி மூன்றே வயதான அவளுக்கு அந்த பயணம் அவ்வளவு ஆனந்தத்தை தந்தது. கருக்கலில் இருந்து விடியல் முழுமை அடையும் அழகை காண்பது அவ்வ்ளவு எளிதானது அல்ல. காப்பியின் ஒரு மிடரை ரசித்து குடித்துவிட்டு அடுத்த மிடருக்காக தலைகுனிவதற்குள் நிகழ்ந்திருக்கும் அன்றைய விடியல். விடுமுறைக்காக ஊருக்கு போகும்போது எல்லாமே அழகாய் தான் தெரியும் போல என்று புன்னகையுடன் நினைத்துகொன்டேன்.

நாங்கள் அம்பாசமுத்திரத்தில் இருக்கும் என்னுடைய அம்மா வீட்டிற்கு போய்க்கொண்டிருந்தோம். ஜனனியின் ஆச்சி வீடு சந்தடி நிறைந்த பேருந்து நிலையத்தின் அருகே இருந்தது. ஜனனியை பார்த்ததும் ஆச்சிக்கு அவ்வளவு மகிழ்ச்சி அம்மை எப்படி இருக்கா? என்று அவளை தூக்கியபடி உள்ளே சென்றாள் கொஞ்ச நேரத்தில் யாரோ வாசல் கதவை தட்டினார்கள். நான் போய் திறந்த போது வெற்றிலை காவி படிந்த பற்களை காட்டி சிரித்தபடி ஒரு வயதானவர் நின்றிருந்தார். தான் வாசலில் பழக்கடை போட்டிருப்பதாய் தன்னை அறிமுக படுத்திகொண்டு என்னை நலம் விசாரித்து விட்டு தண்ணீர் கேட்டார். நான் அம்மாவிடம் என்னம்மா புதுசா இருக்கு இவர் பழக்கடை போட்டிருக்காரா என்றேன் சும்மா யாரவது வண்டி நிறுத்துற இடம் தானே இவருக்காவது பயன்படட்டும்ன்னு கடை போட்டுக்க சொல்லிட்டேன் என்றாள் அம்மா. 

நான் தண்ணீர் புட்டியை திரும்ப குடுத்த போது மாம்பழம் வாங்கிக்கிடுத்தீங்களா என்றார், நான் பிறகு வாங்குவதாய் சொல்லி கதவடைத்தேன். அவர் வைத்திருந்த மாம்பழ வகை நான் அதிகம் ருசித்திராதது ஒரு வேளை அது புளிக்குமோ என்ற சந்தேகம் எனக்கிருந்தது. பதிவாய் மாம்பழம் வாங்கும் கடையில் அம்மா எங்களுக்காக மாம்பழம் வாங்கி வைத்திருந்தாள். 

ஒரு நாள் நல்ல ஓய்வுக்கு பின் நான் கொண்டு வந்திருந்த வீரயுக நாயகன் வேள்பாரியை வாசிக்க தொடங்கினேன். அந்த புத்தகத்தை பற்றிய மதிப்பீடுகள் எல்லாமே எனக்கு பெருத்த ஆர்வத்தை கிளப்பி இருந்தது அதை ஊரில் ஓய்வாய் தான் படிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது எனக்கு. நான் வேள்பாரியில் மூழ்கி இருந்த நாட்களில் ஜனனி மாம்பழ தாத்தாவிற்கு ப்ரிய பேத்தியாகி போனாள். நான் வாசலுக்கு போனாலே மாம்பழம் வாங்க சொல்லி கேட்பார் தாத்தா நானும் நாளைக்கு என்று சிரித்தபடி சொல்லி வந்தேன். இதற்கிடையில் முதல் புத்தகத்தை முடித்து விட்டு அடுத்ததற்கு வந்திருந்தேன். ஜனனியை ஆச்சியிடம் விட்டிருந்ததால் அசுரர் வேகத்திற்கு சென்றது வாசிப்பு.

அங்கவையும் உதிரனும் கிளிமூக்கு மாம்பழங்களுக்காய் வெகு தூரம் பயணித்த பகுதிகளை வாசித்து விட்டு பிரமிப்பு அகலாமல் வாசல் தெளிக்க வந்த போது மீண்டும் கிளிமூக்கு மாம்பழமே கண்களில் விழுந்தது எப்போதும் போல் அப்போதும் மாம்பழம் வாங்கிக்கிடுறீங்களா? என்றார் தாத்தா,சரி என்று தலையசைத்த உடன் ஒரு பழத்தை எடுத்து கழுவி வெட்டி ஜனனிக்கு எனக்கும் தந்தார் தேனாய் இனித்தது பழம். 

ஒரு கிலோ வாங்கிவிட்டு காசு கொடுத்தால் வாங்க மறுத்தார். அவர் எங்களுக்கு காசிற்காக மாம்பழம் விற்க நினைக்கவில்லை. அவரின் வாஞ்சையை காட்ட அது ஒரு வழி அவருக்கு. பல நேரம் கைக்கு அருகில் இருக்கும் அறிய விஷயங்களின் மதிப்பை அறிவதில்லை நாம். அவரின் கையை பிடித்து அன்பாய் நாலு வார்த்தை பேசினால் இயல்பாய் இருக்காது அவருக்கு,"ஏயப்பா நல்ல இனிப்பா இருக்கே நீங்க தார பழமெல்லாம்" என்ற ஒரு வார்த்தை போதும் அவரை மலர வைக்க.

அடுத்த விடுமுறைக்கு நாங்கள் ஊருக்கு போன போது ஜனனி மாம்பழ தாத்தாவை கேட்டாள் அவர் வருவதே இல்லை என்றார் அம்மா. அவரை பற்றி எந்த விவரமும் தெரிந்திருக்கவில்லை எங்களுக்கு. எங்கள் முற்றத்தை அழகாக்கிய அற்புதமான மார்கழி கோலம் அவர் கோலத்தை இன்னும் அழகாக்க வைத்த பூசணி பூவாய் சில கிளிமூக்கு மாம்பழங்கள்

0 comments: