மார்கழி


இரவு படுக்க போகும் போதே அம்மாவிடம் ஆயிரம் முறை சொல்லி வைப்பேன் "அம்மா நாளை காலைல எழுப்பி விட்ருங்க, மறந்துராதீங்க". "என்னடி எதுவும் பரீட்சை இருக்கா??" என்று அம்மா கேட்டால் "இல்லையே அதுகெல்லாம் யாராச்சும் சீக்கிரம் எழுந்துபங்களா??" என்று கேட்டுவிட்டு படுத்து கொள்வேன். அம்மாவுக்கு ஆச்சரியமாய் இருக்கும், திடீர் என்று என்ன பக்தி கூடி விட்டதா இவளுக்கு என்று. ஏன் எனக்கே ஆச்சரியம் தான்.

சின்ன வயதில் அம்மாவோடு கரம் கோர்த்து கோயில் போகும் போது, வெள்ளிகிழமைகளில் பாட்டு பாடசொல்வார் அந்த வாரவழிபாடு தாத்தா, வெட்கத்தில் அம்மாவின் முந்தானையில் ஒளிந்து கொள்வேன் நான், அம்மா "போய் பாடேன் தாத்தா சொல்றங்கள்ள" என்பாள், அவளுக்கும் தெரியும் நான் பாட மாட்டேன் என்பது. பின் நாட்களில் இந்த வார வழிபாட்டிற்கு பயந்தே அம்மாவுடன் கோயில் போவதை நிறுத்தி கொண்டேன். வெள்ளிகிழமைகளில் அம்மா தன் முந்தானையில் கொண்டு வரும் பொறியும் சுண்டலையும் சாப்பிடுவது மட்டுமே என் பக்தியாக மாறிப்போனது.

இப்படி பயணித்த என் பக்தி திடீர் என்று எப்படி மார்கழி மாதங்களில் அதிகாலை எழுந்து கோயில் போகும் அளவுக்கு வளர்த்தது என்று யோசிக்கையில், ஒருமுறை கல்கி புத்தகத்தை புரட்டிய போது ஒரு ஆண்டாள் பாசுரத்தை அதில் விளக்கி இருந்தார், அந்த விளக்கம் எனக்கு பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியது அப்படி ஒரு ஆழ்ந்த காதலா இறைவன் மேல் என்று அசந்து போனேன். ஆண்டாளின் பாசுரங்களை படிக்க படிக்க எனக்கு மார்கழியின் மேல் தீராத காதல் ஏற்பட்டு விட்டது. எனினும் காலையில் என்னை எழுப்ப அம்மா படும் அவஸ்தை இருக்கிறதே, அது ஒரு புறம் இருக்கட்டும்.

முதல் ஒரு துளி படும் வரை குளிருக்கு பயந்து சிலிர்க்கும் உடலுக்கு பின் அள்ளி அள்ளி தலையில் விடும் போது பரவசம் அதிகரிக்கும். தாமிரபரணி ஆற்றங்கரையில் இருள் பிரியாத அதிகாலையில் குளிக்க வேண்டும் என்ற என் ஆசை இன்னும் கனவாகவே இருக்கிறது. மார்கழி என்றதுமே முற்றத்தில் பெரிய கோலங்கள் தான் ஞாபகம் வரும் எனக்கு. அதுவும் பக்கத்து வீட்டு கோமக்காவின் விரல்களுக்கு இடையே கோலபொடியை வைத்து வித்தை போல் ரெண்டு இழைகளில் கோலம் போடுவதை பார்த்து கொண்டே பலமணி நேரம் நிற்பேன்.

குளித்து விட்டு ஒரு கூட்டமாய் போவோம் எல்லாரும். நுனி முடியில் நீர் சொட்ட சொட்ட கோடாலி கொண்டையுடன் அந்த அதிகாலை நேரத்தில் கோயிலுக்கு வரும் எல்லா பெண்களுமே அழகாய் தான் இருப்பார்கள். பெரு
ம்பாலும் எல்லா பெண்களின் மனதிலும் நல்ல மணாளன் வேண்டும் என்ற கோரிக்கை தான் இருக்கும். எனக்கு அந்த சின்ன வயதில் என்ன கல்யாணம் வேண்டி இருக்கு சும்மா பாசுரங்கள் தந்த பிரமிப்புக்காகவும், கோலங்களை கோமாக்கா போடும் அழகை பார்பதர்காகவும், கிருஷ்ணன் கோயிலில் கிடைக்கும் அந்த வெண் பொங்கலுக்காகவும் போவேன் போல.
மார்கழி மேலும் கோலங்களின் மேலும் ஆசை இருந்தென்ன இப்போது வரை கோமக்கா மாதிரி அழகாக கோலம் போட வராது எனக்கு. எனினும் என்ன என் மனதில் வரைய பட்ட அந்த அற்புத கோலங்கள் இன்றும் கலையாமல் அதே அழகோடு மிளிர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

10 comments:

Unknown said...

very nice....

Ponniyin Selvan said...

இனியாள்..நல்ல பதிவு. இப்படித்தான் என புரிந்து கொள்ளவோ.. இல்லை கேட்டு தெரிந்து கொள்ளவோ முடியாத பருவம். ஆனால்.. அப்போது நிறைய விஷயங்கள் மனதுக்குள் உட்கார்ந்து இன்னும் கேள்விகள் கேட்டு கொண்டே இருக்கும். இது நிஜம்.. இதற்கு இனியாளின் இந்த பதிவு... நல்ல உதாரணம். மார்கழியின் பரபரப்பை இன்னும் சொல்லி இருக்கலாம் என்கிறே உணர்வு வருவது உண்மைதான். இனியாள் சொல்வது போல (கோடாலி கொண்டை.. நுனியில்).. இலை நுனியில் விழாமல் ஒட்டி கொண்டு இருக்கும்.. பனித்துளிபோல.. கொண்டை நுனியில் ஒட்டிக்கொண்டு இருக்கும் நீர்த்துளிகள் .. இது மார்கழி மாசத்து ஸ்பெஷல் . தெளிவான முகமும்.. அலங்கரிக்கப் பட்ட நெற்றியுமாய் மார்கழி நகரும். இனியாளின் இந்த பதிவில்.நடையில் நகைசுவை தானாகவே இழைந்து வந்திருகிறது.. முழுவதுமாய். ஆனால்.. திடிரென.. கேள்வி கேட்டு முடித்து இருப்பது.. ஒரு குறை போலவே படுகிறது. நேரம் கிடைக்கும் போது இதை சரிபண்ணவும் இனியாள். தொடரவும்.. இன்னும் இன்னுமாய்..! வாழ்த்துக்களுடன்..!

இனியாள் said...

வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி தோழர். நீங்கள் சொல்லி இருப்பதை போல இன்னும் நிறைய எழுதலாம் எனினும் மலர்ந்த
ரோஜா இதழ்களுக்குள் ஒட்டி இருக்கும் பனித்துளி சிந்தி விடும் முன் அதை எழுதிவிட துடிக்கும் என் மனசிற்கு பனித்துளிகளை கையில் ஏந்தவாவது முடிந்த மகிழ்ச்சி இப்போது. மார்கழி என்னுள் எழுப்பும் கேள்வியை நான் எழுதி இருக்கிறேன், எனக்குள் எவ்வளவோ இன்பங்களை ஏற்படுத்திய மார்கழி துயரமான
சில கேள்விகளையும் எழுப்புகிறதே என்ன செய்ய....

Priya said...

நல்ல பதிவு...கோலம் போட்டோ....சூப்பர்ப்!

கமலேஷ் said...

மிக அழகான பதிவு ஆனால் டக்கென்று முடித்து விட்டீர்கள்..உங்களின் மற்ற பதிவுகளையும் படித்தேன் மிக நன்றாக உள்ளது கவிதைகளும் நன்றாக எழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள். தொடருங்கள்...

Raja said...

"வெண் பொங்கலுக்காகவும் போவேன் போல"
உண்மையை தாராளமாக ஒப்புக்கொள்ளலாம்!!

"எழுந்துபங்களா??"
எழுத்துப்பிழை!! எழுந்துப்பாங்களா தான் சரி

"கோடாலி கொண்டை"
அருமை

"கோமக்காவுக்கு அந்த 40 வயது ஆளை எப்படி பிடித்தது"
நம்மூர் திருமணத்தில் மணப்பெண்களுக்கு மாப்பிள்ளையை பிடிக்க வேண்டுமா என்ன?

இதென்ன கடவுள் மறுப்பு பதிவா? ஆனாலும் கோமக்காவுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம்..

இனியாள் said...

நன்றி கமலேஷ் இப்படி ஒரு எண்ணம் எனக்குள்ளும் இருந்தது.

இனியாள் said...

நன்றி பிரியா ஸ்ரீப்ரியா இருவருக்கும்.

இனியாள் said...

ராசா அது கடவுள் மறுப்பு பதிவெல்லாம் இல்லை, கடவுளை எந்த கோரிக்கை இன்றியும் வழிபடுவது நல்லது என்று சொல்ல வருகிறேன், வருகைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி.

Anand R said...

நல்ல பதிவு... யதார்த்தங்களின் தொகுப்பு. வாக்கியங்களின் மெருகு கூடியுள்ளது. வாழ்த்துக்கள் இந்து...