வாசிப்பின் மனவெளி-1ஒரு இளங்காலையின் அழகை, மென் காற்றின் சுகத்தை, வசந்த கால மாலையில் பறவைகளின் இன்பகூச்சலை, நதியின் சலசலப்பை நான் நேரடியாக உணர்ந்ததை விட புத்தகத்தில் அதை வாசித்த பின் உணர்த்த போது அவை இன்னும் அழகான அனுபவத்தை எனக்கு ஏற்படுத்தியதுண்டு.அவ்வளவு நாள் நான் பார்த்த அதே வானத்தை, மலையை, மழையை வேறு ஒரு மந்திர கண்ணாடியின் வழி பார்க்கும் ஒரு அற்புத உணர்வை எனக்கு தந்தது வாசிப்பு.

பதின்மங்களின் தொடக்கத்திலேயே எனக்கு வாசிப்பில் ஒரு ஈடுபாடு வந்து விட்டிருந்தது,முதலில் ஆங்கிலத்தில் தொடங்கிய என் வாசிப்பை பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் தமிழின் பக்கம் இழுத்து வந்தன. கற்பனையிலேயே இவ்வளவு பெரிய அற்புதத்தை எழுத முடியுமா என பிரமித்த நான் பிற்பாடு நாயகன் சுரங்க பாதையின் இருட்டில் பதுங்கினால் நானும் அவன் நிழலாய் திரிந்தேன், நாயகி கடலில் படகோட்டினால் நானும் அவளுடன் சேர்ந்து துடுப்பு வலித்தேன், அவள் வெட்கப்படும் போது எனக்கும் கன்னங்கள் சூடானது. கற்பனை செய்து கொண்டே படிக்க வசமாய் சித்திரங்கள் வேறு இருந்ததால் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும் அந்த கற்பனை வெளி அந்த வயதில் பெரிய பிரமிப்பிற்குரியதாய் இருந்தது, இன்றும் கூட அந்த பிரமிப்பு தீராமல் தான் இருக்கிறது, இதற்கு இடமாறு தோற்ற பிழை கூட காரணமாய் இருக்கலாம்.

இடமாறு தோற்ற பிழை பற்றி சொல்வதெனில்(விவரமாக அறிய இங்கேசொடுக்கலாம் )ஒரு மழை நாளை நான் ஜன்னலருகே ராஜாவின் இசையோடும், சூடான தேநீரோடும் கழிக்கிறேன் அந்த நாள் என்னுள் ஆழமாய் பதிந்து போகிறது, மற்றொரு நாளும் மழை பொழிகிறது அன்று நன்றாக நனைந்தும் விடுகிறேன் எனினும் என் மனதில் முன்பொருமுறை மழையை நான் ரசித்ததே அற்புதமான மழை நாளாய் நினைவில் இருப்பின் அது தான் இடமாறுத்தோற்றபிழை, இது மறுபடியும் நாம் வாசித்த புத்தகத்தையே மீள் வாசிப்பு செய்யும் போது ஏற்படும் நமக்கு. இதை போன்ற தோற்ற பிழைகளில் இருந்து தப்பி மீள் வாசிப்புக்கு போவதெனில் நிறைய அற்புதமான விஷயங்களை நாம் கண்டுகொள்ள இயலும். இதை பொன்னியின் செல்வனில் ஒரு பகுதியிலே நான் நன்றாக உணர்தேன். அதில் வானதி குந்தவைடம்(இரு முக்கியமான கதாபத்திரங்கள் -தலைவிகள்) பேசும் தருணங்களை நான் அவ்வளவு சிறப்பாய் வாசித்தது இல்லை, ஆனால் ஒரு முறை ஆழமாய் வாசித்த போது, வானதி சொல்கிறாள் 'அவர் சூரியனை போல நானோ பனித்துளி போல பனித்துளி சூரியன் மேல் ஆசைபடலாமா? அது தான் நடக்குமா என்கிறாள், அதற்கு குந்தவை சொல்கிறாள் பனித்துளியாய் இருந்தாலும் அந்த சூரியனையே உனக்குள் பதுக்கி வைக்கிறாயே என்று, அதற்கு வானதியும் ஆனால் கடைசியில் பனித்துளி காணாமல் போகிறதே என்று சொல்லி வருந்தும் போது குந்தவை சொல்கிறாள் பனித்துளியை அனைவரும் பார்ப்பது சூரியனுக்கு பொறாமையாய் இருப்பதால் அது பனித்துளியை தன்னுள் ஒழித்து வைத்து இரவானதும் மறுபடியும் வெளியில் விடுகிறது' என்றும் தொடரும் அந்த விளக்கம் எனக்கு இதுவரை நான் யோசித்திராத ஒரு வெளியை எனக்கு அறிமுகப்படுத்தியது.

இதற்கு பின் நான் நா . பார்த்தசாரதியின் படைப்புக்களை வாசிக்க தொடங்கினேன், அவை என்னை சரித்திர உலகத்தில் இருந்து இழுத்து வந்து எதார்த்த மனிதர்கள் நடுவில் விட்டு விட்டன, எனினும் அற்புதமான மலையடிவாரத்தின் குழுமையையும், அப்படி இதமான குளிரில் அன்பு நெஞ்சங்களின் பவித்ரமான காதலையும் நினைவு படுத்தும் அவரின் படைப்புகளான குறிஞ்சி மலர்கள், பொன் விலங்கு, சத்திய வெள்ளம் எல்லாம் படிக்க படிக்க திகட்டாதவை. இப்படி கற்பனைகளில் கிடந்த என்னை புரட்சிகரமான எழுத்துக்களுக்கு இட்டு சென்ற நாவல் தாய். முற்றிலும் புதிய பரிமாணமாய் வாசிப்பு மறுபடியும் என் எண்ணங்களை திசை மாற்றியது.

வாசிப்பின் இசை தொடரும்....

7 comments:

ரோஸ்விக் said...

எழுத்து நடை அசத்துகிறது. வாழ்த்துகள் தோழி.

Madumitha said...

நிச்சயமாக.
வாசிப்பு நிறைய கதவுகளைத்
திறந்து விடுகிறது.
தொடரட்டும்.

விஜய் said...

பகிர்வுகள் அற்புதம்

நிறைய எழுதுங்கள் சகோதரி

வாழ்த்துக்கள்

விஜய்

தமிழ் உதயம் said...

வாசிப்பை சுகமாய் தான் பகிர்ந்துள்ளீர்கள். படங்கள் அழகோ அழகு.

இனியாள் said...

நன்றிகள் பல ரோசவிக், மதுமிதா, விஜய் மற்றும் தமிழ் உதயதிற்கும்.

சி. கருணாகரசு said...

தமிழை வாசிக்கின்றீர்கள் பாராட்டு!
உங்க பதிவுவும் படமும் மிக அழகு.

LK said...

நல்ல நடை. நானும் கல்கியினால் தமிழ் வாசிக்க ஆரம்பித்த ஒருவன்.. தொடரட்டும் உங்கள் எழுத்து